மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் நகரில் மனிதாபிமானமற்ற ஒரு கொடூரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பவன் சாஹூ என்பவர், கடந்த 12 ஆண்டுகளாகச் சாகர் ரயில்வே நிலையப் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி காய்கறி வியாபாரம் செய்து வந்தார். சனிக்கிழமை காலை அவரது மனைவி பார்வதி சாஹூவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. வறுமை மற்றும் போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால், ஆம்புலன்ஸை அழைக்கத் தெரியாத அந்த முதியவர், தான் வியாபாரம் செய்யும் காய்கறித் தள்ளுவண்டியிலேயே தனது மனைவியைப் படுக்க வைத்து மருத்துவமனைக்கு ஓடியுள்ளார்.

​ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவரது மனைவி பரிதாபமாக உயிரிழந்தார். மிகக் கொடுமையான விஷயம் என்னவென்றால், காலை 10 மணி அளவில் பரபரப்பாக இருந்த அந்தச் சாலையில், ஒரு முதியவர் தனது மனைவியின் சடலத்தைத் தள்ளுவண்டியில் வைத்து இரண்டு கிலோமீட்டர் தூரம் தள்ளிச் சென்றதை நூற்றுக்கணக்கான மக்கள் வேடிக்கை பார்த்தார்களே தவிர, ஒருவர்கூட உதவ முன்வரவில்லை. இறுதியில் மோதிநகர் பகுதியில் இருந்த சில இளைஞர்களும், வார்டு கவுன்சிலர் பிரதிநிதியும் இதைப் பார்த்துவிட்டு ஓடிவந்து, அந்தப் பெண்ணின் இறுதிச் சடங்கிற்கு ஏற்பாடு செய்தனர். “எனக்கு ஆம்புலன்ஸ் கூப்பிடத் தெரியாது, எப்படியாவது என் மனைவியைக் காப்பாற்ற நினைத்தேன்” என்று அந்த முதியவர் கண்ணீர் மல்கக் கூறியது ஒட்டுமொத்த தேசத்தையே உலுக்கியுள்ளது.