மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில், திருமண அழைப்பிதழ் வழங்கிவிட்டு வீடு திரும்பிய இளைஞர் வேன் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
உசிலம்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் பிரசன்ன வெங்கடேஷ் (26). பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த இவருக்கு, வருகிற 28-ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. திருமண வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், பிரசன்ன வெங்கடேஷ் உறவினர்களுக்குத் திருமண அழைப்பிதழ்களை நேரில் சென்று வழங்கி வந்தார்.
நேற்று முன்தினம் இரவு, உசிலம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அழைப்பிதழ் வழங்கிவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் அவர் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். உசிலம்பட்டி – பேரையூர் சாலையில் வந்தபோது, எதிரே வந்த வேன் ஒன்று எதிர்பாராதவிதமாக இவரது பைக் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட பிரசன்ன வெங்கடேஷ், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், பிரசன்ன வெங்கடேஷின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், வேன் ஓட்டுநரைப் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் திருமணம் நடைபெற இன்னும் சில நாட்களே இருந்த நிலையில், மணக்கோலம் காண வேண்டிய இளைஞர் விபத்தில் சிக்கி உயிரிழந்தது அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
