தமிழக அரசியலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்க பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுமே தீவிரமாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
விஜய்யை தங்கள் பக்கம் இழுப்பதற்காக பாஜக தரப்பில் அமித் ஷா நேரடியாக ஆர்வம் காட்டி வருவதாகவும், அவருக்குப் பிடித்தமான ‘விசில்’ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியதே இதற்கு ஒரு சிக்னல் என்றும் கூறப்படுகிறது.
விஜய்க்காக காத்திருப்பதால், தேமுதிகவுடனான தொகுதிப் பங்கீட்டைக்கூட பாஜக தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பதாகத் தெரிகிறது. ராஜ்யசபா எம்.பி பதவி மற்றும் தேர்தல் செலவுகளை கவனித்துக் கொள்வது போன்ற அதிரடி ஆஃபர்களை பாஜக முன்வைத்துள்ளது.
மறுபுறம், ராகுல் காந்தியும் விஜயுடன் ரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுக கூட்டணியில் தங்களுக்கு அதிக இடங்கள் கிடைக்காது என்பதால், விஜயுடன் கூட்டணி வைத்தால் 100 தொகுதிகள் வரை போட்டியிடலாம் என்றும், ஆட்சியில் பங்கு கிடைக்கலாம் என்றும் காங்கிரஸ் தலைமை கணக்கு போடுகிறது.
விஜய் மீது ராகுல் காந்திக்கு ஒருவித அனுதாபம் இருப்பதால், இந்த புதிய கூட்டணி அமைந்தால் அது திமுகவிற்குப் பெரிய நெருக்கடியைத் தரும் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதனால் திமுக தரப்பு சற்று கலக்கத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
தற்போதைய நிலையில் விஜய் தனது கட்சி நிர்வாகிகளிடம் கூட்டணி குறித்து அமைதி காக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். பாஜக, காங்கிரஸ் என இரு தரப்பிலிருந்தும் வரும் அழைப்புகளைத் தீவிரமாகப் பரிசீலித்து வரும் அவர், இறுதி நேரத்தில் யாருடன் இணைவார் அல்லது தனித்துப் போட்டியிடுவாரா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.
ராகுல் காந்தி எடுக்கும் முடிவைப் பொறுத்தே தமிழகத்தின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் அமையும் என்பதால், திமுக மற்றும் பாஜக ஆகிய இரு தரப்புமே காங்கிரஸின் அடுத்த கட்ட நடவடிக்கையை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.
