சவூதி அரேபியாவின் ஜெட்டாவில் நடைபெற்ற உலக கிரிக்கெட் திருவிழாவின் ஒரு பகுதியாக, இந்தியா மற்றும் பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் பங்கேற்ற ‘இரட்டை விக்கெட்’ கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், போட்டி முடிந்ததும் இந்திய அணியின் இர்பான் பதான் மற்றும் ஸ்டூவர்ட் பின்னி ஆகியோர் பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக்கைக் கட்டிப்பிடித்து, மற்ற வீரர்களுடன் கைகுலுக்கினர்.

“>

கடந்த 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் மே மாதம் இரு நாடுகளுக்கும் இடையே நேரிட்ட ராணுவ மோதலுக்குப் பிறகு, இந்திய கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்கிக் கொள்வது இதுவே முதல் முறையாகும்.

ஏற்கனவே ஆசிய கோப்பையின் போது இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் உள்ளிட்டோர் பாகிஸ்தான் வீரர்களுக்குக் கைகுலுக்க மறுத்து ‘ஒத்துழையாமை’ இயக்கத்தை முன்னெடுத்த நிலையில், முன்னாள் வீரர்களின் இந்தச் செயல் சமூக வலைதளங்களில் காரசாரமான விவாதங்களை உருவாக்கியுள்ளது.

“>

பஹல்காம் தாக்குதலில் இந்திய சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழித்தது. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், விளையாட்டு வீரர்களின் இத்தகைய இணக்கமான அணுகுமுறை தேசப்பற்றற்ற செயல் என ஒரு தரப்பினரும், விளையாட்டு என்பது பகையைத் தாண்டிய நட்பு என மற்றொரு தரப்பினரும் சமூக வலைதளங்களில் கருத்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

“>

குறிப்பாக, ஆசிய கோப்பை மற்றும் மகளிர் உலகக்கோப்பை தொடர்களில் இந்திய அணிகள் பாகிஸ்தான் வீரர்களைத் தவிர்த்து வந்த நிலையில், தற்போது வைரலாகி வரும் இப்புகைப்படங்கள் இர்பான் பதான் மற்றும் பின்னியை ட்ரோல்களுக்கு உள்ளாக்கியுள்ளது