தமிழக வெற்றி கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது திமுகவுடன் தான் சேரப் போவதாக வரும் தகவல்களில் துளி கூட உண்மை இல்லை எனவும் ஈரோடு மக்கள் சந்திப்பின் போதே விஜய் திமுகவை தீய சக்தி என தெளிவாக கூறிவிட்டார் எனவும் திமுகவின் பி டீம் என தமிழக வெற்றி கழகத்தை கூறுவதில் எந்தவித அர்த்தமும் கிடையாது என்று கூறினார்.

அதன் பிறகு தொடர்ந்து பேசிய அவர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவை போன்று விஜய் ஒரு நல்ல தலைவராக விளங்கும் நிலையில் நான் தமிழக வெற்றிக்கழகத்தை தேர்வு செய்ததை சிறந்ததாக நினைக்கிறேன். தற்போது விஜய்க்கு 34 சதவீத வாக்குகள் உள்ளது. நான்தான் முதன் முதலில் எடப்பாடி பழனிச்சாமியை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் அறிமுகப்படுத்தினேன். நான் அறிமுகப்படுத்தி வளர்த்துவிட்ட ஒருவரே என்னை கட்சியிலிருந்து நீக்கி விட்டார்.

என்னை நீக்கியதை நினைத்து நான் இரண்டு நாட்கள் தூங்காமல் அழுதேன். நான் எந்த தப்பும் செய்யவில்லை. கூவத்தூர் நிகழ்வின்போது சசிகலா என்னை அழைத்து முதலமைச்சர் பதவியை ஏற்க்குமாறு கூறிய நிலையில் நான் அதனை மறுத்துவிட்டேன். மேலும் அதிமுகவை நான் சேர்க்க நினைத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்து விட்டது என  வேதனையுடன் கூறினார்.

மேலும் காங்கிரஸ் கட்சி தற்போது இரண்டு பிரிவுகளாக உள்ளது எனவும் அவர்களின் செயல்பாடுகளை கணிப்பது கடினம் எனவும் இருப்பினும் ஒரு தரப்பினர் எங்களுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் செங்கோட்டையன் கூறினார். அதே நேரத்தில் பாஜகவை கொள்கை எதிரி என விஜய் கூறியதால் அவர்களுடன் எப்போதும் கூட்டணி கிடையாது எனவும் உறுதிப்படுத்தினார்.