திருப்பூரில் வசித்து வரும் மதுரையைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர், தனது மகள் சிம்யாவை இன்ஸ்டாகிராம் நண்பருடன் ஓடிப்போன ஆத்திரத்தில் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். திருமணமாகி இரண்டு வயதில் குழந்தையுள்ள சிம்யா, அதிக நேரம் செல்போன் பார்த்ததால் கணவருடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய நபருடன் சிம்யா கன்னியாகுமரிக்கு ஓடிவிட, போலீசார் அவரை மீட்டு வந்து பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.

ஆனால், மகள் செய்த காரியத்தால் சமூகத்தில் தனக்குத் தலைகுனிவு ஏற்பட்டுவிட்டதாக ஆத்திரமடைந்த தந்தை ஆறுமுகம், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மகளின் கழுத்தை ஆட்டை அறுப்பது போல அறுத்தும், உடல் முழுவதும் குத்தியும் கொன்றுள்ளார். ​மகளைக் கொன்றுவிட்டு, ரத்த வெள்ளத்தில் கிடந்த அவள் உடல் அருகே அமர்ந்து ஆறுமுகம் கதறி அழுதுள்ளார். வெளியே சென்றிருந்த அவரது மனைவியும் குழந்தையும் வந்து பார்த்தபோது, வீடு முழுவதும் ரத்தம் ஆறாக ஓடுவதையும் சிம்யா பிணமாகக் கிடப்பதையும் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

தகவலறிந்து வந்த போலீசார் ஆறுமுகத்தைக் கைது செய்தபோது, “மானமே போய்விட்டது, இனி வெளியே எப்படி நடமாடுவேன் என்ற ஆத்திரத்தில்தான் கொலை செய்தேன்” என அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். ஒரு செல்போன் பழக்கமும், தவறான முடிவும் ஒரு குடும்பத்தையே சிதைத்து, ஒரு உயிரைப் பறித்ததோடு தந்தையையும் கம்பி எண்ண வைத்திருப்பது அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.