வேலூர் தீர்த்தகிரி முருகன் கோவிலில் விபூதி வழங்கி வந்த சிறுவன் கைது செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்தி முற்றிலும் வதந்தி எனத் தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் (TNGovt Fact Check) விளக்கம் அளித்துள்ளது.
வேலூர் மாவட்டம், தீர்த்தகிரி வடிவேல் சுப்பிரமணிய சாமி திருக்கோவில் பகுதியில், ‘குட்டி முருகர்’ என்று அழைக்கப்படும் சிறுவன் ஒருவன் விபூதி வழங்கி, யாசகம் பெற்று வந்துள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் அண்மைக்காலமாக இணையத்தில் வைரலாகின. இந்நிலையில், அந்தச் சிறுவனைப் போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றதாகச் சில தரப்பினர் தவறானத் தகவலைப் பரப்பினர்.
இந்த விவகாரம் குறித்துத் தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: கோவிலில் யாசகம் பெற்று வந்த அந்த மாற்றுத்திறனாளிச் சிறுவன், உரிய முறையில் மீட்கப்பட்டாரே தவிரக் கைது செய்யப்படவில்லை. மீட்கப்பட்ட அந்தச் சிறுவன், தற்போது அருகாமையில் உள்ள பள்ளி ஒன்றில் கல்வி பயிலச் சேர்க்கப்பட்டுள்ளார். றுவனின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு, அவரது பெற்றோருக்குத் தேவையான ஆலோசனைகளும் விழிப்புணர்வும் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் சிறுவர்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பயன்படுத்தி, உண்மைக்குப் புறம்பானத் தகவல்களைப் பரப்புவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே, பொதுமக்கள் இத்தகைய வதந்திகளை நம்பவோ அல்லது பகிரவோ வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
