அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் – உஷா தம்பதி தங்களுக்கு 4-வது குழந்தை பிறக்க உள்ளதாக மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்கள் குடும்பத்தில் புதிய உறுப்பினராக மற்றுமொரு ஆண் குழந்தையை வரவேற்க காத்திருக்கிறோம். ஜூலை மாத இறுதியில் குழந்தை பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது; தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர்” எனத் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இவான் (8), விவேக் (5), மிராபெல் (4) ஆகிய 3 குழந்தைகள் உள்ள நிலையில், தற்போது 4-வது முறையாக உஷா வான்ஸ் கருவுற்றிருப்பது அமெரிக்க அரசியலில் ஒரு வரலாற்று நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

அமெரிக்க வரலாற்றிலேயே பதவியில் இருக்கும்போது ஒரு துணை ஜனாதிபதியின் மனைவி கர்ப்பமடைவது இதுவே முதல்முறையாகும். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த உஷா வான்ஸின் பெற்றோர் ஆந்திராவிலிருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் பிறப்பு விகிதம் குறைந்து வருவதாக கவலை தெரிவித்து வந்த வான்ஸ், அதற்கு முன்னுதாரணமாகத் தனது குடும்பத்தை விரிவுபடுத்தி வருவதை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.