தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு, அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மீண்டும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ளார்.

சென்னையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், எல்.முருகன் மற்றும் தமிழக பாஜக தலைவர்களை நேரில் சந்தித்து தனது ஆதரவை அவர் உறுதிப்படுத்தினார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தக் கூட்டணியில் இருந்து வெளியேறியிருந்த அவர், தற்போது மக்கள் நலன் கருதி பழைய கசப்புகளை மறந்து மீண்டும் இணைந்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும், உட்கட்சிப் பூசல்களையும் ஓரமாக வைத்துவிட்டு, தமிழகத்தின் நன்மைக்காகவும் தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்தவும் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறினார்.

‘இன்னா செய்தாரை ஒறுத்தல்’ என்ற வள்ளுவரின் வாக்கினைச் சுட்டிக்காட்டிய அவர், வரவிருக்கும் தேர்தலில் இக்கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் நிலைநாட்ட அமமுக தொண்டர்கள் கடுமையாக உழைப்பார்கள் என்றும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு, “அது அனைவருக்கும் நன்றாகத் தெரியும்” என்று எடப்பாடி பழனிசாமியின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல் டிடிவி தினகரன் பதில் அளித்தார்.

வரும் 23-ஆம் தேதி மதுராந்தகத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ள நிலையில், தினகரனின் இந்த வருகை அதிமுக – பாஜக கூட்டணியை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

தற்போது இக்கூட்டணியில் பாமக, தமாகா உள்ளிட்ட முக்கிய கட்சிகள் ஏற்கனவே இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.