2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்தியா வந்து விளையாட வங்கதேச அணி மறுப்பு தெரிவிக்கும் பட்சத்தில் அந்த அணிக்கு பதிலாக மாற்று அணியைச் சேர்க்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) முடிவு செய்துள்ளது. பாதுகாப்பு காரணங்களைக் கூறி இந்தியாவில் திட்டமிடப்பட்டுள்ள தங்கள் போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என வங்கதேச கிரிக்கெட் வாரியம் விடுத்த கோரிக்கையை ஐசிசி திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.

புதன்கிழமை நடைபெற்ற ஐசிசி வாரியக் கூட்டத்தில், வங்கதேச அணி இந்தியாவுக்கு வராது என்ற முடிவில் உறுதியாக இருந்தால், அவர்களுக்குப் பதிலாக வேறு ஒரு அணியைச் சேர்ப்பதற்குப் பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் இறுதி முடிவை அறிவிக்க வங்கதேச கிரிக்கெட் வாரியத்திற்கு ஐசிசி மேலும் ஒரு நாள் கால அவகாசம் வழங்கியுள்ளது.

ஒருவேளை வங்கதேச அணி தனது முடிவை மாற்றிக்கொள்ளாவிட்டால், தரவரிசை அடிப்படையில் ஸ்காட்லாந்து அணி உலகக்கோப்பைத் தொடரில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. ஐரோப்பிய தகுதிச் சுற்றுப் போட்டிகளில் நெதர்லாந்து மற்றும் இத்தாலி அணிகளிடம் தோற்று உலகக்கோப்பைக்குத் தகுதி பெறும் வாய்ப்பை ஸ்காட்லாந்து இழந்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது ஐசிசியின் இந்த அதிரடி முடிவால் வங்கதேச அணியின் பங்கேற்பு குறித்த கேள்விக்குறி எழுந்துள்ளதோடு, கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.