மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் குடும்பப் பிரச்சினையால் மனமுடைந்த நபர் ஒருவர், மது அருந்திவிட்டு ரயில் தண்டவாளத்தில் படுத்துத் தற்கொலைக்கு முயன்ற நிலையில், ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் அவரைச் சரியான நேரத்தில் மீட்டு உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.

குவாலியரின் ரசூலாபாத் பகுதியைச் சேர்ந்த 43 வயதான கிருஷ்ணா என்பவர், கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ஒரு மணி அளவில் படாவ் மேம்பாலப் பகுதிக்குக் கீழே உள்ள ரயில் தண்டவாளத்தில் படுத்துக் கிடந்துள்ளார். அப்போது அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த துணை ஆய்வாளர் ரவீந்திர சிங் ரஜாவத் தலைமையிலான போலீசார், அவரைக் கண்டெடுத்து உடனடியாக தண்டவாளத்திலிருந்து அப்புறப்படுத்தினர்.

 

அவர்கள் மீட்டு பத்து நிமிடங்களிலேயே அந்தப் பாதையில் அதிவேக ரயில் ஒன்று கடந்து சென்றது. குடும்பத் தகராறு காரணமாகத் தான் உயிரிழக்க விரும்புவதாகக் கூறி அந்த நபர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், பின்னர் அவருக்குத் தகுந்த ஆலோசனை வழங்கப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.