சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் அரங்கேறிய ஒரு கொடூரமான குற்றச் செயலில், தற்போது நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது. பள்ளி மாணவிகளைச் சீரழித்த மதபோதகர் முதல் புரோக்கர்கள் வரை அனைவரும் கம்பி எண்ணத் தொடங்கியுள்ளனர்.
கடந்த 2014-ம் ஆண்டு, திட்டக்குடியில் 7 மற்றும் 8-ம் வகுப்பு படித்து வந்த இரு சிறுமிகளை, தனலட்சுமி என்ற பெண் ஆசை வார்த்தை கூறி விபச்சாரத்தில் தள்ளியுள்ளார்.
மதபோதகர் அருள்தாஸ் என்பவர் அந்தச் சிறுமிகளைத் தனது வீட்டில் வைத்துச் சீரழித்துள்ளார். அதோடு நில்லாமல், புரோக்கர்கள் மூலம் சேலம், விழுப்புரம் எனப் பல்வேறு ஊர்களுக்கு அந்தச் சிறுமிகளை விற்பனை செய்து நரக வேதனையை அனுபவிக்கச் செய்துள்ளனர்.
இந்த வழக்கில் ஏற்கனவே மதபோதகர் அருள்தாஸ் உள்ளிட்டோருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த சதீஷ்குமார் மற்றும் அவரது மனைவி தமிழரசி உள்ளிட்ட 3 பேருக்கு தற்போது தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடலூர் போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
