தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணிக் கணக்குகள் தற்போதே வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, பாரதிய பார்வர்ட் பிளாக் (தமிழ்நாடு) கட்சியின் மாநில அமைப்பாளர் முருகன் மற்றும் இளைஞரணிச் செயலாளர் செந்தில்கணேஷ் ஆகியோர் நேற்று (ஜன. 20) சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்துப் பேசினர். மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று தெரிவிக்கப்பட்டாலும், வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-வுக்குப் பாரதிய பார்வர்ட் பிளாக் கட்சி தனது முழு ஆதரவை வழங்க முன்வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே பாமக, பாஜக மற்றும் டிடிவி தினகரனின் அமமுக ஆகிய கட்சிகளுடன் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படும் நிலையில், சிறிய கட்சிகளும் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து வருவது ‘மெகா கூட்டணி’ அமைக்கும் அதிமுக-வின் வியூகத்தை உறுதிப்படுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். தென் மாவட்டங்களில் கணிசமான செல்வாக்கு கொண்ட சமூக அமைப்புகளின் ஆதரவைத் திரட்டும் முயற்சியின் ஒரு பகுதியாகவே இந்தச் சந்திப்பு பார்க்கப்படுகிறது.