திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே, செல்போன் கடன் செயலி மூலம் வாங்கிய கடனை அடைப்பதற்காக மூதாட்டியை இளைஞர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெத்தகல்லுப்பள்ளி பகுதியைச் சேர்ந்த பவுனம்மாள் (65) என்ற மூதாட்டி, கடந்த 6-ஆம் தேதி தனது மாட்டுக்கொட்டகைக்குச் சென்றபோது மர்மமான முறையில் கொல்லப்பட்டுக் கிடந்தார். அவரது கை, கால்கள் துணியால் கட்டப்பட்டு, தலையில் கல்லால் தாக்கப்பட்ட நிலையில் அவர் அணிந்திருந்த 4 சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
இந்தக் கொலை தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரைப் பிடித்துப் போலீஸார் விசாரணை நடத்தினர். அதில், கடன் செயலிகள் மூலம் வாங்கிய பல ஆயிரம் ரூபாய் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாததால், தனியாக இருந்த மூதாட்டியைக் கொலை செய்து நகையைப் பறித்ததாக அவர் ஒப்புக்கொண்டார்.
கைதான முருகனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். ஆன்லைன் கடன் மோகத்தால் ஒரு உயிர் பறிபோன இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
