அதிமுக ஆட்சிக்கு வந்தால் ஆண்களுக்கும் இலவசப் பேருந்து பயணம் வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதிக்கு, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அளித்துள்ள விளக்கம் அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.
சென்னையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியின் முதல்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார். அதில், “நகரப் பேருந்துகளில் மகளிருக்கு வழங்கப்பட்டு வரும் கட்டணமில்லாப் பயணத் திட்டம் தொடரும்; அத்துடன் ஆண்களுக்கும் நகரப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணம் செயல்படுத்தப்படும்” என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த வாக்குறுதி குறித்து சிவகாசியில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியதாவது: “தற்போதுள்ள திமுக அரசு மகளிருக்கு மட்டும் இலவசப் பயணத்தை அறிவித்து, ஒற்றுமையாக இருந்த குடும்பங்களைப் பிரித்துவிட்டது. பேருந்தில் ஏறும் போது மனைவிக்கு டிக்கெட் இல்லை, ஆனால் கணவர் டிக்கெட் எடுக்க வேண்டியுள்ளது. இந்த நிலையை மாற்றி குடும்பங்களை மீண்டும் இணைக்கவே எடப்பாடியார் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.”
மேலும் அவர் பேசுகையில், “ஆண்களுக்கும் இலவசம் என்று அறிவித்தால்தான், கணவன் தன் மனைவியுடனோ அல்லது இளைஞர்கள் தங்கள் காதலியுடனோ எவ்விதத் தயக்கமும் இன்றி இலவசமாகப் பேருந்தில் ஏறி சினிமாவுக்குச் செல்ல முடியும்; ஊர் சுற்ற முடியும். குடும்பத்தோடு மகிழ்ச்சியாகப் பயணம் செய்ய வேண்டும் என்ற நோக்கிலேயே இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது,” என்று தனது பாணியில் வித்தியாசமான விளக்கம் அளித்தார்.
மேலும் இந்த நூதன விளக்கம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், அரசியல் வட்டாரத்தில் விவாதங்களையும் கிளப்பியுள்ளது.
