தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக கிரீன்லாந்து தீவை அமெரிக்காவுடன் இணைக்கப்போவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இது தொடர்பாக டென்மார்க் நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும், உடன்பாடு எட்டப்படாவிட்டால் ராணுவ நடவடிக்கை எடுக்கவும் தயங்கப்போவதில்லை என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளது சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிரம்ப்பின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள 8 ஐரோப்பிய நாடுகள் மீது, அதிரடியாக 10 சதவீத கூடுதல் இறக்குமதி வரியை விதித்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவின் இந்த தன்னிச்சையான போக்கிற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) சமூக வலைதளப் பக்கத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில்:
கிரீன்லாந்தில் அமெரிக்க தேசியக் கொடியை டிரம்ப் ஏந்தி நிற்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.
“2026-ஆம் ஆண்டு முதல் கிரீன்லாந்து அமெரிக்காவின் ஒரு பகுதியாக (US Territory) நிறுவப்பட்டது” என்ற வாசகமும் அதில் அச்சிடப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, மற்றொரு சர்ச்சைக்குரிய படத்தையும் டிரம்ப் பகிர்ந்துள்ளார். அந்த வரைபடத்தில் கனடா, கிரீன்லாந்து மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகள் அமெரிக்காவின் ஒரு பகுதியாகக் காட்டப்பட்டுள்ளன. அண்டை நாடுகளின் இறையாண்மையை கேள்விக்குள்ளாக்கும் டிரம்ப்பின் இந்தச் செயல், வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளிடையே பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
