மும்பையில் ராபிடோ பைக் டாக்ஸி ஓட்டுநர் ஒருவர், பெண் பயணி ஒருவருக்கு மிகவும் ஆபாசமான மற்றும் அச்சுறுத்தும் வகையிலான குறுஞ்செய்திகளை அனுப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் தனது பயணத்தை முடித்த பிறகு, ஓட்டுநர் அவரது அலைபேசி எண்ணிற்கு பாலியல் ரீதியான வன்முறை மற்றும் ஆபாச வார்த்தைகள் அடங்கிய செய்திகளை அனுப்பியுள்ளார்.
இது குறித்து அந்தப் பெண்ணின் நண்பர் சமூக வலைதளங்களில் வெளியிட்ட வீடியோவில், அந்த ஓட்டுநரின் பெயர் ராபிடோ செயலியில் ஒருவிதமாகவும், ட்ரூகாலர் செயலியில் வேறொரு பெயரிலும் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட தரப்பினர் இது குறித்து ராபிடோ நிறுவனத்திடம் புகார் அளித்தபோது, நிறுவனம் வெறும் பொதுவான பதில்களை மட்டுமே அளித்து அலட்சியம் காட்டியதாகக் கூறப்படுகிறது. மேலும், காவல் துறையின் அவசர எண் மற்றும் பெண்கள் உதவி எண்களைத் தொடர்பு கொண்டபோதும் சரியான துரித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, மும்பை காவல்துறை தற்போது இந்த விவகாரத்தில் தலையிட்டு விசாரணையைத் தொடங்கியுள்ளது. பயணிகளின் பாதுகாப்பு, குறிப்பாகப் பெண்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை இச்சம்பவம் மீண்டும் எழுப்பியுள்ளது.
