கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த தீபக் என்ற வாலிபர், பேருந்தில் பயணம் செய்தபோது ஒரு பெண் பயணி அவரிடம் தவறாக நடந்துகொண்டதாகக் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டார். ஆனால், அந்த வீடியோவில் தீபக் மீது எந்தத் தவறும் இல்லை என்பது பிறகு தெரியவந்தது. இருப்பினும், அந்தப் பெண் சமூக வலைதளங்களில் தன்னை அசிங்கப்படுத்தியதால் மன உளைச்சலுக்கு ஆளான தீபக், தற்கொலை செய்துகொண்டார். வெறும் ‘ரீல்ஸ்’ லைக்குகளுக்காகவும், விளம்பரத்திற்காகவும் ஒரு அப்பாவி வாலிபரின் உயிரைப் பறித்த அந்தப் பெண்ணுக்கு எதிராகக் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

​இந்தச் சம்பவத்தின் தாக்கத்தால், தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் பேருந்தில் பயணம் செய்யும் ஒரு நபர், பெண்கள் தன் மீது உரசிவிடக்கூடாது அல்லது தவறான புகார் கூறிவிடக்கூடாது என்பதற்காகத் தன்னைச் சுற்றிப் பெரிய அட்டைகளை (Safety Shields) வைத்துக் கொண்டு அமர்ந்துள்ளார். இந்த வீடியோவைப் பார்க்கும் மக்கள், “ஆண்களின் நிலைமை இன்று இவ்வளவு பரிதாபமாக மாறிவிட்டதா?” என்று வேதனையுடன் கேள்வி எழுப்பி வருகின்றனர். சட்டங்கள் பெண்களுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை, ஆனால் அது அப்பாவிகளைப் பழிவாங்கப் பயன்படுத்தப்படக்கூடாது என்பதே பலரின் கருத்தாக உள்ளது.