உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு, அடர்ந்த மூடுபனி காரணமாகச் சாலை தடுப்பை மீறி 30 அடி ஆழமான தண்ணீர் நிரம்பிய பள்ளத்தில் கார் விழுந்த விபத்தில், 27 வயது மென்பொருள் பொறியாளர் யுவராஜ் மேத்தா பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து நடந்தவுடன் காரின் மேற்கூரை மீது ஏறி நின்றபடி, சுமார் 90 நிமிடங்கள் தனது தந்தைக்கும் காவல்துறைக்கும் போன் செய்து தன்னை காப்பாற்றுமாறு அவர் கதறியுள்ளார். ஆனால், சம்பவ இடத்திற்கு வந்த 80-க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள், தண்ணீர் மிகவும் குளிர்ச்சியாக இருப்பதாகவும், உள்ளே இரும்புக் கம்பிகள் இருக்கலாம் என்றும் கூறி உள்ளே இறங்க மறுத்துவிட்டதாக யுவராஜின் தந்தை ராஜ்குமார் மேத்தா கண்ணீருடன் குற்றம் சாட்டியுள்ளார். ஒரு டெலிவரி ஊழியர் மட்டும் துணிச்சலாகத் தண்ணீரில் குதித்துத் தேடியும், போதிய வெளிச்சம் மற்றும் உபகரணங்கள் இல்லாததால் யுவராஜை மீட்க முடியவில்லை.
இந்தச் சம்பவத்தில் நிர்வாகத்தின் மெத்தனமே ஒரு இளய உயிரைப் பறித்துள்ளதாகப் பொதுமக்கள் கொந்தளித்துள்ளனர். இது தொடர்பாகத் தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள உத்தரப்பிரதேச அரசு, முதற்கட்டமாக நொய்டா ஆணையத்தின் ஒரு இளநிலைப் பொறியாளரைப் (JE) பணிநீக்கம் செய்துள்ளது.
மேலும், பாதுகாப்பற்ற முறையில் பள்ளத்தைத் தோண்டி வைத்திருந்த இரண்டு கட்டுமான நிறுவனங்கள் மீது ‘கவனக்குறைவால் மரணம் விளைவித்தல்’ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நவீனத் தொழில்நுட்பங்கள் மற்றும் மீட்புக் குழுக்கள் இருந்தும், ஒரு தந்தை தன் மகன் மெல்ல மெல்ல நீரில் மூழ்கிப் பலியாவதைத் திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்த அவலம், தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
