தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால், ஒவ்வொரு கட்சியும் மற்ற கட்சிகளில் இருக்கும் முக்கிய நிர்வாகிகளைத் தங்கள் பக்கம் இழுக்கத் தீவிரமாக வேலை செய்து வருகின்றன. குறிப்பாக, கொங்கு மண்டலம் எப்போதும் அரசியல் ரீதியாகப் பரபரப்பாக இருக்கும் என்பதால், அங்கு ஆளுங்கட்சியான திமுக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது. அந்த வகையில், கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைமலை மேற்கு ஒன்றியத்தைச் சேர்ந்த திமுக அவைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், திடீரென திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளனர்.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி முன்னிலையில் இந்த இணைப்புப் படலம் நடந்துள்ளது. சொந்தக் கட்சியிலேயே முக்கியப் பொறுப்பில் இருந்தவர்களே தேர்தலுக்கு முன்னதாக இப்படி அணி மாறுவது கோவை மாவட்ட திமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம், கொங்கு மண்டலத்தில் தனது செல்வாக்கை மீண்டும் நிலைநிறுத்த அதிமுக போடும் இந்த ‘ஸ்கெட்ச்’ அக்கட்சித் தொண்டர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், இதுபோன்ற கட்சித் தாவல்கள் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
