திருவண்ணாமலையில் நடைபெற்ற பிரம்மாண்ட இளைஞரணி மாநாட்டைத் தொடர்ந்து, தென் மாவட்ட இளைஞர்களைக் கவரும் வகையில் திமுக இளைஞரணியின் அடுத்த கட்ட நிர்வாகிகள் சந்திப்பு வரும் பிப்ரவரி 7-ஆம் தேதி விருதுநகரில் நடைபெற உள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்ற, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள இந்தச் சந்திப்பு, தென் மண்டலத்தின் 28 கழக மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் ஒரு லட்சம் நிர்வாகிகள் பங்கேற்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
குறிப்பாக வரும் தேர்தலை முன்னிட்டு, இளைஞர்களின் வாக்குகளைக் குறிவைத்து இந்த மாபெரும் எழுச்சிச் சந்திப்பு ஒருங்கிணைக்கப்படுகிறது.
விருதுநகர் ‘கலைஞர் திடலில்’ மாலை 4 மணிக்குத் தொடங்கவுள்ள இந்த நிகழ்ச்சியில், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு மற்றும் திமுகவின் முக்கிய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனப் பெரும் பட்டாளமே பங்கேற்க உள்ளது.
தென் மாவட்டங்களில் வாக்குச்சாவடி நிலை வரையிலான இளைஞரணி நிர்வாகிகள் வெண்சீருடை அணிந்து கலந்துகொள்ள வேண்டும் என்றும், அவர்களை ஒருங்கிணைக்கும் பொறுப்பை அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் திமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது.
