தமிழக அரசுப் போக்குவரத்து கழகத்தில் இயக்கப்படும் பேருந்துகளின் தரம் குறித்து பாஜக மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் பல பகுதிகளில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகள் மிகவும் பழுதடைந்த நிலையில் இருப்பதாகவும், இது பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

சமீபகாலமாகச் சாலையில் செல்லும் போதே அரசுப் பேருந்துகளின் டயர்கள் கழன்று ஓடுவது, ஓட்டுநரின் இருக்கை உடைவது, மழை பெய்தால் பேருந்துக்குள்ளேயே குடை பிடிக்க வேண்டிய அவலம் எனப் பல செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

இதைக் குறிப்பிட்டுப் பேசிய நயினார் நாகேந்திரன், “மக்களின் உயிருடன் விளையாடுவது என்ன நியாயம்? ஓட்டை உடைசல் பேருந்துகளைச் சாலையில் ஓடவிட்டு விபத்துகளுக்கு அரசே வழிவகுக்கிறதா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

உடனடியாகப் பழைய பேருந்துகளை அப்புறப்படுத்திவிட்டு, புதிய மற்றும் பாதுகாப்பான பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.