சீனாவில் பிறப்பு விகிதம் தொடர்ந்து நான்காவது ஆண்டாகக் குறைந்து வருவது அந்நாட்டு அரசாங்கத்திற்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. சீன தேசிய புள்ளியியல் வாரியம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2025-ஆம் ஆண்டில் பிறப்பு விகிதம் 1,000 பேருக்கு 5.63 என்ற அளவிற்கு சரிந்துள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டில் இது 6.39 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதன் விளைவாக, சீனாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் சுமார் 33.9 லட்சம் பேர் குறைந்துள்ளனர். உலகளவில் மக்கள் தொகையில் முதலிடத்தில் இருந்த சீனா, தற்போது இந்தியாவுக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
மக்கள் தொகையை அதிகரிக்க சீன அரசு பல்வேறு சலுகைகளையும் வினோதமான கல்வித் திட்டங்களையும் அறிமுகப்படுத்தி வருகிறது. குறிப்பாக, கல்லூரி மாணவர்களுக்கு ‘காதல் கல்வி’ வழங்குதல், மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுக்கு தலா ரூ.40,000 நிதியுதவி மற்றும் திருமணத்திற்கு ஊக்கத்தொகை போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
மேலும் இருப்பினும், பொருளாதாரச் சிக்கல்கள் மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்கள் காரணமாக இத்தகைய திட்டங்கள் மக்களிடையே போதிய வரவேற்பைப் பெறவில்லை. அரசின் இத்தனை முயற்சிகளுக்கு இடையிலும் பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிந்து வருவது சீனாவின் எதிர்கால பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும் என அஞ்சப்படுகிறது.
