பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், பாலிவுட்டில் நிலவும் மதவாதச் சூழல் காரணமாகத் தனக்குப் பட வாய்ப்புகள் குறைக்கப்படுவதாகத் தெரிவித்த கருத்து பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ரஹ்மானின் இந்தக் கருத்தை மூத்த பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் மறுத்திருந்த நிலையில், அவருக்குப் பதில் அளிக்கும் விதமாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் “ஜாவேத் அக்தர் ரஹ்மானின் கவலைகளை நிராகரிப்பது, இந்திய முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் கசப்பான உண்மைகளை மறுப்பதாகும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஜாவேத் அக்தரின் மனைவி ஷபானா ஆஸ்மிக்கே மும்பை போன்ற பெருநகரங்களில் முஸ்லிம் என்ற காரணத்திற்காக வீடு மறுக்கப்பட்ட நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டிய மெகபூபா முஃப்தி, இன்றைய இந்தியாவில் இதுவே எதார்த்த நிலை என்று விமர்சித்துள்ளார்.
இதனால் பாலிவுட் எப்போதும் நாட்டின் சமூக நிலையைப் பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடியாக இருந்து வருவதாகவும், ரஹ்மான் போன்ற ஒரு ஆளுமையே இத்தகையப் பாகுபாட்டை உணரும்போது அதைச் சாதாரணமான விஷயமாகக் கடந்து செல்ல முடியாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
