தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள ஆனைக்காடு கிராமத்தில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்பட்ட நீச்சல் போட்டியில் பெரும் சோகம் ஏற்பட்டது. இந்தப் போட்டியில் அதே பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான மணிகண்டன் என்பவர் ஆர்வத்துடன் கலந்துகொண்டார்.

போட்டி தொடங்கியதும் மற்ற வீரர்கள் வேகமாக நீந்திச் சென்ற நிலையில், மணிகண்டன் எதிர்பாராதவிதமாக குளத்தில் இருந்த சேற்றில் சிக்கி தண்ணீருக்குள் மூழ்கினார். தந்தை தண்ணீரில் தத்தளிப்பதை அறியாத அவரது பிஞ்சு குழந்தைகள், அவர் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசையில் கரையில் நின்று உற்சாகமாகக் கூச்சலிட்டுக் கொண்டிருந்தது அங்கிருந்தவர்களைக் கலங்கச் செய்தது.

சிறிது நேரத்திற்குப் பிறகு மணிகண்டன் நீரில் மூழ்கியதை அறிந்த சக போட்டியாளர்கள், அவரை மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர். ஆனால் அவர் ஏற்கனவே பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது. முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி இந்தப் போட்டி நடத்தப்பட்டதே மணிகண்டனின் உயிரிழப்புக்கு முக்கியக் காரணம் என ஊர் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்தத் துயரச் சம்பவம் குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், ஒரு குடும்பத்தையே சோகத்தில் ஆழ்த்திய இந்த நிகழ்வு அந்த கிராமத்தையே நிலைகுலையச் செய்துள்ளது.