தாராபுரம் அருகே குடும்பத் தகராறு காரணமாகக் காதல் மனைவியை அரிவாளால் வெட்டிக்கொலை செய்த கணவனைப் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த மொண்டிக்காட்டுத் தோட்டம் பகுதியில் இளம்பெண் ஒருவர் வெட்டுக் காயங்களுடன் சடலமாகக் கிடப்பதாகக் குண்டடம் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தகாவல் துணைக் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார், சடலத்தைக் கைப்பற்றி விசாரணையைத் தொடங்கினர்.

போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்தவர் கொக்கம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த அங்கமுத்துவின் மனைவி பூங்கொடி (வயது 30) என்பது தெரியவந்தது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி அங்கமுத்துவும் பூங்கொடியும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்குப் பெமினேஷன், நித்யா என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

சில ஆண்டுகள் மகிழ்ச்சியாகச் சென்ற இவர்களது குடும்ப வாழ்க்கையில், கடந்த சில மாதங்களாகப் புயல் வீசத் தொடங்கியுள்ளது. சமையல் வேலை செய்து வரும் அங்கமுத்துவுக்கு மதுப் பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மது போதையில் அங்கமுத்து தனது மனைவியைத் தொடர்ந்து துன்புறுத்தி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இந்நிலையில் பூங்கொடி முகம், கை, கால்களில் பலத்த வெட்டுக் காயங்களுடன் பிணமாக மீட்கப்பட்டார். கொலையாளி அடையாளத்தைத் மறைப்பதற்காகப் பூங்கொடியின் முகத்தைச் சிதைத்திருப்பது போலீஸாருக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இது குறித்துத் தனிப்படை அமைத்துத் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

சந்தேகத்தின் அடிப்படையில் பூங்கொடியின் கணவர் அங்கமுத்துவைப் பிடித்துப் போலீசார் விசாரித்தனர். ஆரம்பத்தில் முன்னுக்குப் பின் முரணாகப் பேசிய அவர், பின்னர் குடும்பத் தகராறில் ஆத்திரமடைந்து தனது மனைவியை வெட்டிக்கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

“காதலித்துத் திருமணம் செய்த மனைவியையே கணவன் ஆத்திரத்தில் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் தாராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.”

இக்கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா? என்ற கோணத்தில் போலீசார் அங்கமுத்துவிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்