நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் மற்றும் தொலைத்தொடர்பு விதிகளை மீறி, அங்கீகரிக்கப்படாத வாக்கி-டாக்கிகளை (Walkie-Talkie) விற்பனை செய்த 8 ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) மொத்தம் ரூ.44 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

ஆன்லைன் தளங்களில் உரிமம் பெறாத வாக்கி-டாக்கிகள் மற்றும் ரேடியோ உபகரணங்கள் தடையின்றி விற்பனை செய்யப்படுவதாகக் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக ஜியோமார்ட், மீஷோ, பிளிப்கார்ட், அமேசான், மெட்டா (பேஸ்புக்) உள்ளிட்ட 13 முன்னணி நிறுவனங்களுக்கு CCPA முன்னதாக நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்தத் தளங்களில் சுமார் 16,970-க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்படாத பொருட்கள் பட்டியலிடப்பட்டிருந்தது ஆய்வில் கண்டறியப்பட்டது.

நுகர்வோர் உரிமைகளை மீறியது உறுதி செய்யப்பட்டதையடுத்து, தற்போது இறுதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நுகர்வோர் விவகாரங்கள் துறைச் செயலாளர் நிதி காரே கூறியதாவது: அமேசான், பிளிப்கார்ட், மீஷோ மற்றும் மெட்டா ஆகிய 4 நிறுவனங்களுக்கு தலா ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சிமியா, ஜியோமார்ட், டாக் ப்ரோ மற்றும் மாஸ்க்மேன் டாய்ஸ் ஆகிய 4 நிறுவனங்களுக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

விதிக்கப்பட்ட அபராதத் தொகையை மீஷோ, மெட்டா, சிமியா, ஜியோமார்ட் மற்றும் டாக் ப்ரோ ஆகிய 5 நிறுவனங்கள் ஏற்கனவே செலுத்திவிட்டன. மற்ற நிறுவனங்கள் இன்னும் அபராதத் தொகையைச் செலுத்தவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, ஆன்லைன் வணிகத் தளங்களில் வாக்கி-டாக்கி போன்ற ரேடியோ கருவிகளை விற்பனை செய்வதை ஒழுங்குபடுத்துவதற்கான விரிவான வழிகாட்டுதல்களை CCPA வெளியிட்டிருந்தது. பாதுகாப்பு காரணங்களுக்காகவும், நுகர்வோர் நலன் கருதியும் இந்தத் தடைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.