பிக் பாஷ் லீக் (BBL 2025-26) தொடரின் ஒரு பகுதியாக நடைபெற்ற சிட்னி டெர்பி போட்டியின் போது, பாகிஸ்தான் நட்சத்திர பேட்டர் பாபர் அசாமை ரசிகர்கள் உருவக் கேலி செய்யும் வகையில் கோஷமிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பாபர் அசாமின் ஆட்டம் சொல்லிக்கொள்ளும் படி இல்லை. குறிப்பாக, அணியின் வெற்றிக்குத் தேவையான முக்கிய தருணங்களில் அவர் சொதப்பி வருவது அந்நாட்டு ரசிகர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, முன்னாள் கேப்டனான அவரை மைதானத்திலேயே ரசிகர்கள் கிண்டல் செய்வது தொடர்கதையாகி வருகிறது.

 

சிட்னி மைதானத்தில் பாபர் அசாம் எல்லைக் கோட்டிற்கு அருகே (Boundary line) பீல்டிங் செய்து கொண்டிருந்தபோது, அங்கிருந்த ரசிகர் ஒருவர் அவரை ‘ஜிம்பாபர், ஜிம்பு’ (ZimBabar, Zimbu) என அழைத்து கோஷமிட்டார். சிறிய அணிகளுக்கு எதிராக, குறிப்பாக ஜிம்பாப்வே அணிக்கு எதிராக மட்டுமே பாபர் அசாம் சிறப்பாக விளையாடுவார் என சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்படுவது உண்டு. அதனை மையப்படுத்தியே ஆஸ்திரேலிய ரசிகர்கள் இவ்வாறு அவரை வம்புக்கு இழுத்தனர்.

ரசிகர்களின் இந்தத் தொடர் கோஷங்களுக்கு மத்தியிலும், பாபர் அசாம் எல்லைக் கோட்டில் ஒரு அபாரமான கேட்ச் பிடித்து அசத்தினார். இருப்பினும், அவர் கேட்ச் பிடித்த பின்னரும் ரசிகர்கள் அவரை கேலி செய்வதை நிறுத்தவில்லை.

சமீபகாலமாக ஃபார்ம் அவுட்டில் இருக்கும் பாபர் அசாம், இத்தகைய விமர்சனங்களுக்குத் தனது பேட்டிங் மூலம் பதிலடி கொடுப்பாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.