19 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தான் வீரர் அலி ரஸாவின் கவனக்குறைவால் ஏற்பட்ட விசித்திரமான ரன்-அவுட் காரணமாக, இங்கிலாந்து அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெள்ளிக்கிழமை (ஜனவரி 16) நடைபெற்ற இந்தப் போட்டி மழையினால் அவ்வப்போது பாதிக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, காலேப் ஃபால்கனரின் (66 ரன்கள்) சிறப்பான ஆட்டத்தால் 210 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பாகிஸ்தான் தரப்பில் அலி ரஸா சிறப்பாக பந்துவீசி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பம் முதலே பின்னடைவு ஏற்பட்டது. கேப்டன் ஃபர்ஹான் யூசுப் (65 ரன்கள்) மட்டுமே நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
ஆட்டத்தின் 47-வது ஓவரில் பாகிஸ்தான் வெற்றிக்கு 38 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் ஒரு விக்கெட் மட்டுமே இருந்த நிலையில், அலி ரஸா நான்-ஸ்டிரைக்கர் முனையில் இருந்தார். மோமின் கமர் அடித்த பந்தை சிக்ஸருக்கு அனுப்ப முயன்று ஒரு ரன் ஓடினார்.
View this post on Instagram
அலி ரஸா மிக எளிதாக ஸ்டிரைக்கர் முனையை அடைந்த போதிலும், தனது பேட்டை கிரீஸிற்குள் வைக்காமல் மெத்தனமாக இருந்தார். அப்போது கீப்பரிடம் பந்து வந்தபோது, அவர் மீது பட்டுவிடுமோ என்ற பயத்தில் பின்னோக்கி சாய்ந்தார். ஆனால், பேட்டை உள்ளே வைக்க மறந்துவிட்டார். இதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட இங்கிலாந்து கேப்டன் தாமஸ் ரீவ், மின்னல் வேகத்தில் ஸ்டம்புகளைத் தட்டி ரன்-அவுட் செய்தார்.
இதனால் பாகிஸ்தான் அணி பரிதாபமாகத் தோல்வியைத் தழுவியது. களத்தில் நின்ற வீரர்கள் மற்றும் ரசிகர்கள் இந்த விசித்திரமான ஆட்டமிழப்பைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். “மைதானப் பராமரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய நன்றிகள். ஆட்டம் நடைபெறும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. விக்கெட்டுகளைக் குறிவைத்து பந்துவீசியது எங்களுக்குப் பலன் அளித்தது,” என வெற்றிக்குப் பின் இங்கிலாந்து கேப்டன் தாமஸ் ரீவ் தெரிவித்தார்.
