ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஷபூர் ஜத்ரான், கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடி வரும் செய்தி கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் ஒரு வலிமையான சக்தியாக உருவெடுக்க அடித்தளம் அமைத்த முன்னோடி வீரர்களில் ஷபூர் ஜத்ரானும் ஒருவர். தற்போது அவர் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஷபூர் ஜத்ரானின் சகோதரர் சமூக வலைதளங்களில் இது குறித்த தகவலைப் பகிர்ந்துள்ளார். அதில், ஷபூர் கடுமையான உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது நிலைமை மிகவும் தீவிரமாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆப்கான் கிரிக்கெட் வட்டாரங்கள் கூறுகையில், ஷபூரின் ரத்தத்தில் உள்ள வெள்ளை இரத்த அணுக்களின் (White Blood Cells) எண்ணிக்கை மிகவும் ஆபத்தான நிலைக்குக் குறைந்துள்ளதாகவும், இதனால் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளன.

கடந்த 2009-ஆம் ஆண்டு நெதர்லாந்து அணிக்கு எதிராக அறிமுகமான ஷபூர் ஜத்ரான், ஆப்கானிஸ்தான் அணிக்காக 80 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்.  44 போட்டிகளில் விளையாடி 46 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். (சிறந்த பந்துவீச்சு: 24 ரன்களுக்கு 4 விக்கெட்).  36 போட்டிகளில் 37 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். ரஷீத் கான், முகமது நபி, குர்பாஸ் போன்ற இன்றைய நட்சத்திர வீரர்கள் உருவாவதற்கு ஷபூர் போன்ற மூத்த வீரர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது.

ஷபூர் ஜத்ரானின் உடல்நிலை குறித்து அறிந்த பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரஷீத் லத்தீஃப், “களத்தில் எதற்கும் அஞ்சாத ஒரு வீரர் ஷபூர், அவர் விரைவில் குணமடைய அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள்” என உருக்கமாக வேண்டியுள்ளார். ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் அவர் விரைவில் நலம் பெற வேண்டுமெனப் பதிவிட்டு வருகின்றனர்.