சென்னை பல்லாவரம் அடுத்த திரிசூலம் அம்மன் நகரைச் சேர்ந்த செல்வகுமார் என்ற இளைஞர், தனது முன்னாள் காதலி மற்றும் மனைவியால் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொத்தனார் வேலை செய்து வந்த செல்வகுமார், முதலில் ரக்சிகா என்பவரைக் காதலித்து பிரிந்துள்ளார்.

பின்னர் ரீனா என்ற பெண்ணைத் திருமணம் செய்த நிலையில், சில மாதங்களிலேயே அவர்களுக்குள்ளும் பிணக்கு ஏற்பட்டு ரீனா பிரிந்து சென்றுவிட்டார். இந்தச் சூழலில், செல்வகுமாரால் பாதிக்கப்பட்ட ரக்சிகாவும் ரீனாவும் தோழிகளாக மாறி, பழைய பல்லாவரம் பகுதியில் தங்களது புதிய நண்பர்களான அலெக்ஸ்பாண்டியன் மற்றும் ஒரு சிறுவனுடன் வசித்து வந்துள்ளனர்.

தன்னை விட்டுப் பிரிந்த இரு பெண்களுடனும் செல்வகுமார் தொலைபேசி வாயிலாக அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரீனாவும் ரக்சிகாவும், செல்வகுமாரைத் தீர்த்துக் கட்ட முடிவு செய்து தங்களது நண்பர்களிடம் தெரிவித்துள்ளனர்.

அவர்களின் திட்டப்படி, கடந்த புதன்கிழமை இரவு பழைய பல்லாவரம் சுபம் நகர் பகுதிக்கு செல்வகுமார் வரவழைக்கப்பட்டார். அங்கு மறைந்திருந்த அலெக்ஸ்பாண்டியன் மற்றும் அந்தச் சிறுவன் ஆகியோர் செல்வகுமாரைச் சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த செல்வகுமார் உயிருக்குப் போராடிய நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

இந்தக் கொலை வழக்கு தொடர்பாகப் பல்லாவரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் ரீனா, ரக்சிகா மற்றும் அந்தச் சிறுவன் ஆகிய மூவரைப் பிடித்து விசாரித்ததில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. செல்வகுமார் தங்களுக்குத் தொடர்ந்து சொல்ல முடியாத அளவிற்குப் பாலியல் ரீதியான தொந்தரவுகளைக் கொடுத்து வந்ததாலேயே, அவரை ஒழித்துக் கட்ட இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டதாக அந்தப் பெண்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இதையடுத்து ரீனா மற்றும் ரக்சிகாவைப் போலீஸார் சிறையில் அடைத்தனர். சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்ட நிலையில், தலைமறைவாக உள்ள அலெக்ஸ்பாண்டியனைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.