விமானத்தில் பயணம் செய்யத் தயாராக இருந்தபோது, தன் மனைவி பக்கத்து இருக்கையில் இருந்த மற்றொரு நபருடன் பேசியதைப் பார்த்து ஆத்திரமடைந்த ஒரு நபர், விமானத்தையே ரணகளமாக்கிய வீடியோ இப்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அந்த நபர் தனது மனைவியின் மீது கொண்ட அதீத பொறாமையால், அங்கிருந்த பயணிகளிடம் மிக மோசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். விமானப் பணிப்பெண்கள் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் ஆவேசப்பட்ட அவர், தன்னை வீடியோ எடுத்த ஒரு பயணியின் மீது ‘பிரெஞ்சு பிரைஸ்’ (French fries) பாக்கெட்டை வீசி எறிந்தார். சுற்றியிருந்தவர்கள் அவரைப் பார்த்துச் சிரிப்பதும், வீடியோ எடுப்பதும் அந்த நபரை இன்னும் அதிக கோபத்திற்கு ஆளாக்கியது. ஒருகட்டத்தில் அவர் பின்னால் இருந்த பயணியைத் தாக்க முயன்றது அங்கிருந்தவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

​நிலைமை கைமீறிப் போவதைக் கண்ட விமான ஊழியர்கள் மற்றும் தரைக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு, அந்த நபரை விமானத்தில் இருந்து கீழே இறக்கினர். அந்த நபர் சாம்பல் நிறச் சட்டையும், வெள்ளை நிறத் தொப்பியும் அணிந்து கொண்டு அங்கிருந்தவர்களிடம் “என்னை வீடியோ எடுக்காதீங்க” என்று கத்திக்கொண்டே வெளியேற்றப்பட்டார். இந்தச் சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் பெரிய விவாதமே நடந்து வருகிறது. “பொறாமை ஒரு மனுஷனை எந்த அளவுக்குக் கொண்டு போகும் என்பதற்கு இதுவே சாட்சி” என்று ஒரு தரப்பினரும், “அவர் ஏற்கனவே டென்ஷனில் இருக்கும்போது மற்றவர்கள் அவரைக் கேலி செய்து வீடியோ எடுத்தது தவறு” என்று மற்றொரு தரப்பினரும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். கணவன் – மனைவி இருவரும் தனித்தனி இருக்கையில் அமர்ந்திருந்ததே இவ்வளவு பெரிய மோதலுக்குக் காரணமாக அமைந்துவிட்டது.