‘சைனோவியல் சார்க்கோமா’ (Synovial Sarcoma) என்ற அரிய வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, மரணத்தின் விளிம்பில் இருந்த ஒரு தந்தை, தனது மனைவி மற்றும் பிஞ்சு குழந்தைகளிடம் இருந்து விடைபெறும் அந்த வீடியோ பார்ப்பவர் எப்பேர்ப்பட்ட கல் நெஞ்சக்காரராக இருந்தாலும் கண்கலங்கச் செய்துவிடும். மருத்துவமனையில் படுக்கையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் அந்தத் தந்தை, தனது அன்பு மகள் மார்பில் சாய்ந்திருப்பதை கண்டு கண்ணீர் மல்கக் கிடக்கிறார்.

தான் இன்னும் சில நிமிடங்களே இந்த உலகில் இருப்போம் என்பது கூடத் தெரியாத அந்தச் சிறுமி, தனது அப்பாவை இறுக்கமாகக் கட்டியணைத்தபடி இருக்கிறார். தனது செல்ல மகளை விட்டுப் பிரியப் போகிறோம் என்ற வலியும், அவளது எதிர்காலத்தைப் பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கமும் அந்தத் தந்தையின் கண்களில் கண்ணீராக வழிந்தோடுகிறது. அவர் மீண்டும் மீண்டும் மகளின் நெற்றியில் முத்தமிடும் காட்சி, வாழ்நாள் முழுமைக்கும் கொடுக்க வேண்டிய அன்பை அந்த சில நொடிகளில் கொடுத்துவிடத் துடிப்பது போல் இருக்கிறது.

​அவரது மகன் அருகே வந்ததும், அந்தத் தந்தை கட்டுப்படுத்த முடியாமல் கதறி அழத் தொடங்குகிறார். எதோ சொல்லத் துடிக்கிறார், ஆனால் உடல் பலவீனமும், தொண்டையை அடைக்கும் அழுகையும் அவரைப் பேச விடாமல் மௌனமாக்குகிறது. வீடியோவின் இறுதியில், அவரது மனைவி அவரை ஆரத்தழுவ, அந்தத் தந்தை தனது உறவுகளின் மடியிலேயே தனது கடைசி மூச்சை விடுகிறார். இந்த உருக்கமான வீடியோ ‘எக்ஸ்’ (X) தளத்தில் லட்சக்கணக்கானோரை அழ வைத்துள்ளது. “வாழ்க்கை எவ்வளவு விலைமதிப்பற்றது என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது, ஒவ்வொரு நொடியையும் நேசியுங்கள்” என்று நெட்டிசன்கள் மிகுந்த வேதனையுடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.