புதுக்கோட்டையில் இன்று (ஜன. 15) செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியால் ஒருபோதும் வலுவான கூட்டணியை அமைக்கவோ அல்லது தங்களைப் பலப்படுத்திக் கொள்ளவோ முடியாது என்று தெரிவித்தார்.

மும்பை விவகாரத்தில் அண்ணாமலையின் பேச்சு மராட்டிய மாநிலத்திலும் புரியவில்லை, இங்கிருப்பவர்களுக்கும் புரியவில்லை என்று குறிப்பிட்ட அவர், தனக்கு ஒரு ஆபத்து வரும்போது மட்டும் தமிழர்கள் மீதான தாக்குதல் என அண்ணாமலை திசைதிருப்புவதாகக் குற்றஞ்சாட்டினார்.

மேலும், “திராவிடம் இணைந்ததுதான் தமிழ்நாடு, அதனால்தான் நாங்கள் திராவிடப் பொங்கல் கொண்டாடுகிறோம்; சீமான் எதற்கெடுத்தாலும் பொங்கல் வைப்பார்” என்று கிண்டலாகப் பதிலளித்தார்.

புதிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்படும் என்ற எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்குப் பதிலளித்த அமைச்சர், தற்போது நிறைய ‘லெட்டர் பேடு’ கட்சிகள் உருவாகி வருவதாகவும், அத்தகைய கட்சிகளையே அவர் குறிப்பிட்டிருப்பார் என்றும் எள்ளி நகையாடினார்.