சமூக வலைதளங்களில் தற்போது காட்டுத்தீயாகப் பரவி வரும் ஒரு வீடியோ, சாலையில் செல்லும் ஒவ்வொருவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில், ஒரு மர்ம நபர் எவ்வித ஆயுதமும் இன்றி, ஒரு இளைஞனின் மனதைக் கட்டுப்படுத்தி அவரிடமிருந்த பணத்தை முழுமையாகப் பறித்துள்ளார். சாலையில் சென்றுகொண்டிருந்த பைக் ஓட்டியிடம் வெறும் 2 ரூபாய் தர்மம் கேட்பது போல வந்த அந்த நபர், அடுத்த சில நொடிகளில் அந்த இளைஞனைத் தனது வசப்படுத்தியுள்ளார். அந்த இளைஞர் ஒரு இயந்திரத்தைப் போல, எவ்வித எதிர்ப்பும் காட்டாமல் தனது பர்ஸில் இருந்த அனைத்து நோட்டுகளையும் எடுத்து அந்த நபரிடம் கொடுத்துள்ளார். அருகில் இருந்தவர்கள் சந்தேகித்துத் தடுத்து நிறுத்திய பின்னரே, அந்த இளைஞர் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளார்.

​பாதிக்கப்பட்ட அந்த இளைஞர் தனது ஹெல்மெட்டில் ‘கோப்ரோ’ (GoPro) கேமரா வைத்திருந்ததால், இந்த முழு மோசடியும் ஆதாரத்துடன் பதிவாகியுள்ளது. இது குறித்து அந்த இளைஞர் கூறுகையில், “அப்போது என்ன நடந்தது என்றே எனக்குத் தெரியவில்லை; உள்ளுக்குள் பணம் கொடுக்கக் கூடாது என்று தோன்றினாலும், என் கைகள் என் கட்டுப்பாட்டில் இல்லை” எனத் திகைப்புடன் தெரிவித்துள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், இது ‘ஹிப்னாடிசம்’ எனப்படும் மனவசியமாக இருக்கலாம் அல்லது அந்த நபர் கைகளில் ஏதேனும் மயக்கமடையச் செய்யும் பொடியைத் தடவி அதன் மூலம் அந்த இளைஞரை நிலைகுலைய வைத்திருக்கலாம் எனத் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். மனிதாபிமானத்தைக் காட்டி உதவி செய்பவர்களைக் குறிவைத்து நடக்கும் இத்தகைய நூதன மோசடிகள் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.