கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டத்திலுள்ள ஒரு அரசுப் தொடக்கப் பள்ளியில், மூன்றாம் வகுப்பு பயிலும் தன்வீர் மற்றும் லட்சுமி ஆகிய இரு மாணவர்கள் மதிய உணவு இடைவேளையின்போது திடீரென காணாமல் போயினர். இடைவேளை முடிந்து மற்ற மாணவர்கள் வகுப்புக்குத் திரும்பிய நிலையில், இவ்விரு குழந்தைகள் மட்டும் வராதது ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், பள்ளியின் அருகிலிருந்த கண்காணிப்புக் கேமரா (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தபோது, மர்ம நபர் ஒருவர் இரு குழந்தைகளையும் அழைத்துச் செல்வது உறுதியானது. இந்த வீடியோ இணையத்தில் பரவி அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

​குழந்தைகளைக் கடத்திச் சென்ற கரீம் மிஸ்திரி என்ற நபர், அவர்களைத் தனது இருசக்கர வாகனத்தில் அமர வைத்து அதிவேகமாகத் தப்பிச் செல்ல முயன்றார். அப்போது வடகன்னடா மாவட்டத்தின் டண்டேலி அருகே சென்றபோது, எதிர்பாராத விதமாக அவரது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் விபத்துக்குள்ளானது. விபத்து குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த டண்டேலி போலீசார், காயமடைந்த நிலையில் இருந்த அந்த நபரிடமும் குழந்தைகளிடமும் விசாரணை நடத்தினர். அதில் அவர் குழந்தைகளைக் கடத்தி வந்தது அம்பலமானது. நல்லவேளையாக குழந்தைகள் இருவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். தற்போது கடத்தல்காரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இக்கட்டான சூழலில் ஒரு விபத்து அக்குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றியது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.