பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள தேரா இஸ்மாயில் கான் பகுதியில், காவல்துறையினரை ஏற்றிச் சென்ற கவச வாகனம் குறிவைத்து நடத்தப்பட்ட பயங்கரமான குண்டுவெடிப்பில் 7 காவல்துறை அதிகாரிகள் உடல்சிதறி உயிரிழந்தனர். இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தின் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் சென்ற வாகனம், சாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியில் சிக்கியதில் அடுத்த சில நொடிகளில் சுக்குநூறாகத் தகர்ந்தது. சம்பவ இடத்திலேயே அதிகாரிகள் உயிரிழந்ததுடன், இந்தத் தாக்குதல் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பதற்றத்தையும் உருவாக்கியுள்ளது.

“>

மேலும் இந்தக் கொடூரத் தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்கவில்லை என்றாலும், இப்பகுதியில் சமீபகாலமாகப் பாக்கிஸ்தானிய தாலிபான் அமைப்பினரின் ஆதிக்கம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. நாட்டின் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் காவல்துறை அதிகாரிகள் மீதே இத்தகைய துணிகரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பாதுகாப்புப் படையினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் தாக்குதல் நடந்த இடத்தைச் சுற்றி வளைத்த ராணுவத்தினர், தப்பியோடிய குற்றவாளிகளைப் பிடிக்கத் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். உயிரிழந்த வீரர்களுக்குப் பாக்கிஸ்தான் அரசு மற்றும் உயரதிகாரிகள் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.