“சம வேலைக்கு சம ஊதியம்” கேட்டுப் போராடி வரும் ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதில் நிதி நெருக்கடி ஒரு பெரிய தடையாக இருப்பதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக அரசு ஆசிரியர்களின் நலனில் அக்கறை கொண்டுள்ளதாகவும், ஆனால் மத்திய அரசிடமிருந்து வரவேண்டிய சுமார் ₹3,548 கோடி நிலுவைத் தொகை இன்னும் வந்து சேராததே இந்தத் தாமதத்திற்கு முக்கியக் காரணம் என்றும் விளக்கமளித்தார்.
இருப்பினும், ஆசிரியர்கள் கவலைப்பட வேண்டாம் என்றும், அவர்களின் எதிர்காலம் மகிழ்ச்சியானதாக அமையத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருவதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். பகுதிநேர ஆசிரியர்களுக்கு இப்போது அறிவிக்கப்பட்டுள்ள ₹2,500 சம்பள உயர்வு முதற்கட்ட நடவடிக்கைதான் என்றும், நிதி நிலைமை சீரானதும் மற்ற கோரிக்கைகளும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி அளித்துள்ளார்.
