அமமுக கூட்டணி விவகாரத்தில் நிலவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அந்தக் கட்சியின் தலைமைக் கழகம் அதிரடியான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கூட்டணி அமைப்பதில் டிடிவி தினகரனுக்கு எந்தவிதமான தயக்கமோ, குழப்பமோ அல்லது அழுத்தமோ இல்லை என்றும், தமிழகத்தின் நலன் மற்றும் கட்சியின் நலனை கருத்தில் கொண்டு உரிய நேரத்தில் நல்ல முடிவு அறிவிக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபகாலமாக ஊடகங்களில் பரவி வரும் பொய்ப் பிரச்சாரங்களை நம்ப வேண்டாம் எனத் தொண்டர்களுக்கு அக்கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும், கட்சி நிகழ்ச்சிகளில் டிடிவி தினகரன் கலந்து கொள்ளவில்லை எனத் தவறான தகவல்கள் பரப்பப்படுவதையும் அமமுக மறுத்துள்ளது.

பொங்கல் பண்டிகை மற்றும் சொந்த வேலைகள் காரணமாகவே அவர் சில நாட்கள் ஓய்வில் இருந்ததாகவும், வரும் 17-ம் தேதி எம்.ஜி.ஆரின் பிறந்தநாளன்று சென்னை அண்ணாசாலையில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து டிடிவி தினகரன் மரியாதை செலுத்துவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்று தொண்டர்களையும் நிர்வாகிகளையும் சந்தித்துப் பேச உள்ளதால், கட்சி வட்டாரத்தில் உற்சாகம் ஏற்பட்டுள்ளது.