தருமபுரியில் மாமியாருடனான கள்ளத் தொடர்புக்கு இடையூறாக இருந்த மாமனாரை, நண்பர்களுடன் சேர்ந்து அடித்துக் கொலை செய்து ஏரியில் வீசிய மருமகன் மற்றும் மாமியார் உள்ளிட்ட 6 பேரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர்.

தருமபுரி அடுத்த மதிக்கோண்பாளையம் ஏரியில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக நகர காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார், தண்ணீரில் கிடந்த சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சடலத்தின் பல்வேறு இடங்களில் வெட்டுக் காயங்கள் இருந்தன. மேலும், ஏரிக்குள் இருசக்கர வாகனம் ஒன்றும் கிடந்தது.

காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், சடலமாக மீட்கப்பட்டவர் எறங்காட்டு கொட்டாய் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் (47) என்பது தெரியவந்தது. இவருக்கு 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் இருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து, ஆறுமுகத்தின் மனைவி ஜோதி (45)  மற்றும் அவரது மருமகன் சீதாராமன் (33) ஆகியோரை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

சீதாராமனும், அவரது மாமியார் ஜோதியும் இணைந்து ஹோட்டல் நடத்தி வந்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே சீதாராமனின் முதல் மனைவி அவரை பிரிந்து சென்ற நிலையில், ஜோதி தனது மூத்த மகள் சந்தியாவை சீதாராமனுக்குக் கட்டாயப்படுத்தி இரண்டாவது திருமணம் செய்து வைத்துள்ளார்.

இந்தத் திருமணத்தில் விருப்பமில்லாத சந்தியா, ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்திற்குப் பணிக்குச் சென்றுவிட்டார். சீதாராமனுடன் குடும்பம் நடத்த வருமாறு சந்தியாவை ஜோதியும் சீதாராமனும் வற்புறுத்தித் தாக்கியுள்ளனர். இதுகுறித்துத் தனது தந்தை ஆறுமுகத்திடம் சந்தியா முறையிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆறுமுகம், தனது மனைவி ஜோதியைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.

தங்களது கள்ளத் தொடர்புக்கு இடையூறாக ஆறுமுகம் இருப்பதால், அவரைக் கொலை செய்ய ஜோதியும் சீதாராமனும் திட்டமிட்டனர். திட்டமிட்டபடி, சீதாராமன் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஆறுமுகத்தைப் பின்தொடர்ந்து சென்று கல்லால் தாக்கிப் படுகொலை செய்துள்ளார். பின்னர், கொலையை மறைக்க ஆறுமுகத்தின் சடலத்தையும், அவரது இருசக்கர வாகனத்தையும் காரில் ஏற்றிச் சென்று  ஏரியில் வீசியுள்ளனர்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக சீதாராமன், அவரது மாமியார் ஜோதி மற்றும் கொலைக்கு உதவியாக இருந்த நண்பர்கள் முருகன், சரவணன், சங்கர் கணேஷ், பிரவீன் குமார் ஆகிய 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர். கைதான அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.