கள்ளக்குறிச்சியில் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், முதல் நிலை காவலர் ஒருவரைக் காவல்துறையினர் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த 32 வயது மதிக்கத்தக்கப் பெண் ஒருவரின் கணவர், வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், கடந்த ஓராண்டுக்கு முன்பு நடைபெற்ற ஒரு போராட்டத்தின் போது, அந்தப் பெண்ணுக்கும் அங்குப் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் ஷேக் சலீம் (36) என்பவருக்கும் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.  இவர், கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராகப் பணியாற்றி வந்தார்.

இருவரும் செல்போன் எண்களைப் பரிமாறிக்கொண்டு அடிக்கடி பேசி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பவத்தன்று காவலர் ஷேக் சலீம் அந்தப் பெண்ணின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு அவர் அந்தப் பெண்ணுக்குப் பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்ததாகத் தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் கூச்சலிடவே, அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் காவலர் அங்கிருந்து தப்பிச் சென்றார்.

பாதிக்கப்பட்ட பெண் இதுகுறித்து கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், ஷேக் சலீமை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, கைது செய்யப்பட்ட காவலர் ஷேக் சலீமை துறை ரீதியாகப் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) அரவிந்த் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் காவலரே கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.