உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் நடந்த இந்தத் துயரச் சம்பவம் மனதை கனக்கச் செய்கிறது. இந்திராபுரம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 11-வது மாடியிலிருந்து குதித்து, 28 வயதே ஆன யக்ஞ பாண்டே (Yagya Pandey) என்ற இளைஞர் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். விளம்பர நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த அவர், கடந்த சில காலமாகவே மன அழுத்தத்தினால் (Depression) பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகத் தெரிகிறது.
திங்கட்கிழமை அதிகாலை 2 மணி அளவில், யக்ஞ பாண்டே முதலில் தனது மணிக்கட்டை அறுத்துக்கொண்டார் என்றும், பின்னர் பால்கனியிலிருந்து கீழே குதித்தார் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றும் பலனின்றி, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கடிதம் எதுவும் கிடைக்காத நிலையில், என்ன காரணத்திற்காக இந்த விபரீத முடிவை எடுத்தார் என்பது குறித்துப் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
