கேரள மாநில சிறைகளில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளின் கூலியை அம்மாநில அரசு பல மடங்கு உயர்த்தி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சிறைச்சாலைகள் வெறும் தண்டனை வழங்கும் இடமாக மட்டுமல்லாமல், கைதிகள் திருந்தி வாழ வழிவகை செய்யும் மறுவாழ்வு மையங்களாகச் செயல்பட வேண்டும் என்ற நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம், திருச்சூர் உள்ளிட்ட மத்திய சிறைச்சாலைகளில் துணி மற்றும் அலுமினியப் பொருட்கள் தயாரிப்பு போன்ற பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ள மூவாயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் இந்த ஊதிய உயர்வால் நேரடியாகப் பலன் பெறுவார்கள்.
புதிய ஊதிய விகிதத்தின்படி, கைதிகளின் திறமைக்கு ஏற்ப மூன்று பிரிவுகளாகக் கூலி வழங்கப்படவுள்ளது. அதன்படி, திறமையான வேலை செய்பவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த 152 ரூபாய், தற்போது 620 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், பாதித் திறமையுடையவர்களுக்கு 127 ரூபாயிலிருந்து 560 ரூபாயாகவும், திறமையற்றவர்களுக்கு 63 ரூபாயிலிருந்து 530 ரூபாயாகவும் கூலி அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் டெல்லி போன்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் கேரளாவில் கைதிகளின் ஊதியம் குறைவாக இருந்ததால், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கடந்த ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த அதிரடி மாற்றத்தைச் செய்துள்ளதாகச் சிறைத்துறை தெரிவித்துள்ளது.
