தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள துத்திகுளத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி ரமேஷ். இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி இறந்த நிலையில், அவரது மகன் சூர்யா தனது தாத்தாவுடன் தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில், ரமேஷ் தனது இரண்டாவது மனைவி மகாலட்சுமியுடன் பொங்கல் பரிசு வாங்க ரேஷன் கடைக்குச் சென்றுள்ளார். அங்கு விற்பனையாளர் ராசுக்குட்டியிடம் டோக்கனை கொடுத்தபோது, “உங்க மகன் சூர்யா ஏற்கனவே பொங்கல் பரிசை வாங்கிட்டுப் போயிட்டாரே” என்று குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்.
இதனால் கடும் கோபமடைந்த ரமேஷ் மற்றும் அவரது மனைவி, “மகன் வாங்கினால் எங்களுக்குக் கிடைக்காதா?” என விற்பனையாளரிடம் மல்லுக்கட்டியுள்ளனர்.
வாக்குவாதம் முற்றிய நிலையில், “இந்த எந்திரம் இருந்தால்தானே எல்லாருக்கும் பணம் கொடுப்பாய்?” என்று எகிறிய ரமேஷ், ஆத்திரத்தில் அங்கிருந்த கைரேகை வைக்கும் எந்திரத்தைத் தூக்கிக்கொண்டு தனது வீட்டிற்கு ஓடியுள்ளார்.
இதனால் கடையில் இருந்த மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். சிறிது நேரம் கழித்து எந்திரத்தைத் திருப்பித் தந்தாலும், விற்பனையாளருக்குக் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்த புகாரின் பேரில், அரசுப் பணியைத் தடுத்தது உட்படப் பல்வேறு பிரிவுகளில் ஆலங்குளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ரமேஷைக் கைது செய்து கம்பி எண்ண வைத்துள்ளனர்.
