பெங்களூரு ராம்மூர்த்தி நகர் பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்த 34 வயது மென்பொருள் பொறியாளர் ஷர்மிளா என்பவர் கடந்த ஜனவரி மாதம் 3-ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். முதலில் அவரது வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதாகவும் புகையில் மூச்சுத்திணறி அவர் இறந்ததாகவும் கருதப்பட்டது.

ஆனால் போலீசாரின் தீவிர விசாரணையில் ஷர்மிளா தீ விபத்தில் இறக்கவில்லை என்பதும் அவர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டிருப்பதும் தற்போது தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் ஷர்மிளாவின் வீட்டின் அருகே வசிக்கும் 18 வயது இளைஞன் கிருஷ்ணையா என்பவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

கேரளாவைச் சேர்ந்த கிருஷ்ணையா ஷர்மிளா மீது ஒருதலைப்பட்சமாக காதல் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவத்தன்று நள்ளிரவில் ஜன்னல் வழியாக ஷர்மிளாவின் வீட்டிற்குள் நுழைந்த அந்த இளைஞன் அவரிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதற்கு ஷர்மிளா கடும் எதிர்ப்பு தெரிவித்து தப்பிக்க முயன்றபோது ஆத்திரமடைந்த கிருஷ்ணையா அவரைத் தாக்கி கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.

பின்னர் இந்தக் கொலையை மறைக்கவும் தடயங்களை அழிக்கவும் வீட்டின் ஒரு பகுதியில் தீ வைத்துவிட்டு தப்பியோடியுள்ளார். இருப்பினும் தடயவியல் ஆய்வு மற்றும் சுற்றுவட்டார விசாரணையின் மூலம் உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.