அரியலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், அதிமுகவின் தற்போதைய அரசியல் நிலையை கடுமையாக விமர்சித்துள்ளார். “தனித்து ஆட்சி என்று வீர வசனம் பேசிய எடப்பாடி பழனிசாமி, அடுத்த இரண்டே நாட்களில் டெல்லி சென்று அமித் ஷாவிடம் சரணடைந்துவிட்டார்” என்று அவர் சாடினார். முன்பு அதிமுகவைத் தேடி பாஜக வந்து கூட்டணி பேசிய காலம் மாறி, இப்போது பாஜகவைத் தேடி அதிமுக செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், எடப்பாடி பழனிசாமி அதிமுகவை அமித் ஷாவிடம் அடகு வைத்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.
போக்குவரத்துத் துறை குறித்துப் பேசிய அமைச்சர், ஆம்னி பேருந்துகளை விட அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்யவே பயணிகள் அதிக ஆர்வம் காட்டுவதாகத் தெரிவித்தார். சென்னையில் முதற்கட்டமாக 20 மாடிப் பேருந்துகளை (Double Decker) இயக்க டெண்டர் விடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், ‘ஜனநாயகன்’ திரைப்பட விவகாரத்தில் தணிக்கை வாரியம் மத்திய அரசின் ஏவலாகச் செயல்படுவதாகக் குறிப்பிட்ட அவர், ஓட்டுநர் இல்லாத பேருந்து வசதிகளை மேம்படுத்துவது மற்றும் புகார் வரும் பட்சத்தில் ஆம்னி பேருந்து கட்டண உயர்வு மீது நடவடிக்கை எடுப்பது குறித்தும் உறுதி அளித்தார்.
