ஜனநாயகன்’ திரைப்படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்துப் பேசிய குஷ்பு, இதற்காக மத்திய அரசைக் குறை கூறுவது தவறு என்று தெரிவித்தார். ஒரு திரைப்படத்தின் ரிலீஸ் தேதியைத் தணிக்கைச் சான்றிதழ் பெற்ற பின்னரே அறிவிக்க வேண்டும் என்பது அடிப்படை விதி என்றும், இதில் தயாரிப்பாளர்கள் செய்த தவறை மறைக்க மத்திய தணிக்கை வாரியத்தின் மீது பழி போடுவது நியாயமில்லை என்றும் அவர் கூறினார். மேலும், ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்த ‘பராசக்தி’ போன்ற படங்களுக்கு மத்திய அரசு தடை விதிக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், எதற்கெடுத்தாலும் பிரதமர் மோடியைக் காரணம் காட்டுவதை நிறுத்த வேண்டும் என்றும், ஒரு ரசிகையாகப் படம் தள்ளிப்போனதில் தனக்கும் வருத்தம் இருப்பதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து, கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணைக்கு விஜய் ஆஜராவது குறித்த கேள்விக்கு பதிலளித்த குஷ்பு, “முதலில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று கேட்டதே விஜய்தான்” என்று நினைவுபடுத்தினார். அவர் மீது எந்தத் தவறும் இல்லாதபோது அவர் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளிப்பதில் எந்தச் சிக்கலும் இல்லை என்றும், இந்தப் பிரச்சினையில் விஜய் முழுக்க முழுக்க திமுக அரசையே குற்றம் சாட்டியுள்ளதாகவும் அவர் கூறினார். தான் கேட்டபடியே சிபிஐ விசாரணை நடப்பதால், விஜய் அதில் பங்கேற்றுவிட்டு வருவார் என்று குஷ்பு தனது கருத்தைப் பதிவு செய்தார்.
