தூத்துக்குடி விளாத்திகுளம் அருகே உள்ள மிட்டா வடமலபுரம் கிராமத்தில், 70 வயது மூதாட்டி பேச்சியம்மாள் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டுள்ளார்.

4 மகன்கள், 2 மகள்கள் எனப் பெரிய குடும்பம் இருந்தும், பேச்சியம்மாள் தனியாக வசித்து விவசாயம் செய்து வந்துள்ளார். கடந்த ஜனவரி 3-ம் தேதி முதல் அவரைக் காணவில்லை என்று கூறப்பட்ட நிலையில், இன்று ஊருக்கு வெளியே உள்ள காட்டுப்பகுதி கிணற்றில் அவர் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

கண்டெடுக்கப்பட்ட மூதாட்டியின் உடல் பார்ப்பவர்களையே அதிரவைக்கும் விதமாக இருந்தது. அவரது கைகளும் கால்களும் துணிகளால் கட்டப்பட்டிருந்ததோடு, உடல் தண்ணீருக்குள் மூழ்கி இருக்க வேண்டும் என்பதற்காக உடலில் கனமான கல் ஒன்றையும் சேர்த்துக் கட்டி கிணற்றுக்குள் வீசியுள்ளனர்.

உடல் முற்றிலும் அழுகிய நிலையில் இருந்ததால், அவர் காணாமல் போன அன்றே கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

சொத்துத் தகராறா அல்லது நகைக்காகக் கொலை செய்யப்பட்டாரா? என விளாத்திகுளம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 70 வயது மூதாட்டிக்கு நேர்ந்த இந்த கொடூரம் அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.