திருச்சியில் பாதுகாப்பாக வளர வேண்டிய 16 வயது சிறுமி, சொந்த உறவினர்களாலேயே 6 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு, அந்தச் சிறுமி 6-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே இந்தத் துன்புறுத்தல் தொடங்கியுள்ளது.
தொடர்ந்து வந்த ஆண்டுகளில், சிறுமியின் பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டிய தாத்தா, தாய்மாமா, அத்தை மகன் என ரத்த உறவுகளே காம மிருகங்களாக மாறி 10-க்கும் மேற்பட்டோர் அந்தச் சிறுமியைச் சீரழித்துள்ளனர்.
இதன் விளைவாகச் சிறுமி கர்ப்பமாகி அண்மையில் ஆண் குழந்தையையும் பெற்றெடுத்துள்ளார். மருத்துவமனையில் குழந்தையை விட்டுவிட்டுச் சென்ற சிறுமியின் குடும்பத்தினர், அதனைத் திரும்பப் பெற்றுக்கொள்ளவும் மறுத்துள்ளனர்.
அப்போது போலீஸார் தலையிட்டு குழந்தையைத் திருச்சி மாவட்டக் குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைத்தனர். ஆனால், அதிர்ச்சியூட்டும் வகையில் இந்த விவகாரம் அத்துடன் கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில், ஓராண்டு கழித்துத் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் தலையீட்டால் தற்போது இந்த விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.
கடந்த மாதம் சிறுமியின் குடும்பத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், அண்மையில் நடந்த விசாரணையில் சிறுமிக்கு நேர்ந்த பல ஆண்டு காலக் கொடுமைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
6-ம் வகுப்பு முதல் சீரழிக்கப்பட்ட அந்தச் சிறுமிக்கு நீதி கிடைக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கொந்தளித்து வருகின்றனர்.
