பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான ராமதாஸுக்கும் அவரது மகனும் கட்சித் தலைவருமான அன்புமணி ராமதாஸுக்கும் இடையே ஏற்பட்டுள்ள அதிகாரப் போட்டி, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் சட்டமன்றத் தேர்தலுக்காக அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பதாக அன்புமணி ராமதாஸ் அறிவித்திருந்த நிலையில், அந்த முடிவு சட்டவிரோதமானது என்று ராமதாஸ் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் கட்சியின் சட்டதிட்டங்களின்படி தேர்தல் கூட்டணிகளை முடிவு செய்யும் அதிகாரம் தனக்கு மட்டுமே உள்ளதாகவும், தன்னிச்சையாகச் செயல்படும் அன்புமணியின் நடவடிக்கைகள் செல்லாது என்றும் அவர் வாதிடுகிறார். இது தொடர்பாகத் தேர்தல் ஆணையத்திற்கும் அவர் விரிவான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இந்தக் கடிதத்தில், கட்சி விதிகளின்படி பொதுக்குழு மற்றும் செயற்குழு மூலம் தனக்கே கூட்டணிக் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதை ராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார். அன்புமணி ராமதாஸ் மேற்கொண்டுள்ள கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் கட்சிக்கும் தொண்டர்களுக்கும் இழைக்கப்படும் துரோகம் என்று அவர் சாடியுள்ளார்.

மேலும், அ.தி.மு.க.வுடன் அன்புமணி ஏற்படுத்திக்கொண்ட உடன்பாட்டைத் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கக் கூடாது என்றும், முறையான சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாத இந்தக் கூட்டணி செல்லுபடியாகாது என்றும் அவர் தனது மனுவில் வலியுறுத்தியுள்ளார். பா.ம.க.வின் இரு துருவங்களாகத் தந்தைக்கும் மகனுக்கும் இடையே வெடித்துள்ள இந்த மோதல், அக்கட்சியின் தொண்டர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது